நீ போஜனப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை (நீதிமொ 23:2)
------------------------------------------------------------
நமது முற்பிதாவாகிய யாக்கோபு சமைத்துக் கொண்டிருந்த சிவப்பான பயற்றங் கூழை ஏசா கண்டபோது அந்தக் கூழில் மதி மயங்கி அந்த அற்ப கூழுக்காக தனது விலையேறப் பெற்ற அருமையான சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் பண்ணி அதை விற்றுப் போட்டது போல அநேக கிறிஸ்தவ மக்கள் தங்கள் நித்திய ஜீவனை அழிந்து போகிற ஆகாரங்களுக்காக பண்டமாற்று செய்து கொண்டிருக்கின்றனர்.
தேவனுடைய வார்த்தை கூறுவதைப் போல அந்த மக்களுக்கு அவர்களுடைய வயறுதான் தேவன் (பிலி 3:19). அநேக தேவ மக்கள் ஆகாரத்துக்கு அடிமையாக கிடக்கின்றார்கள். தேவ ஊழியரும் இதில் அடங்குவர். அந்த ஆகார மோகத்தின் காரணமாகவே அவர்கள் தங்கள் சபைகளில் உபவாசம் குறித்து அதிகமாக பிரசிங்கப்பதில்லை. அவர்களுடைய சபைகளின் உபவாச கூட்டங்கள் எல்லாம் பகலில் சில மணி நேர உபவாசமாகவே இருக்கும். அப்படி தப்பி தவறி முழு நேர உபவாசம் போட்டாலும் கூட்ட முடிவில் பிரியாணி சாப்பாட்டைப் போட்டு பகலில் இருந்த உபவாசத்தின் மேன்மையை சாத்தான் குலைத்து போடுவான். எல்லா தேவ ஊழியர்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை.
கன்வென்ஷன் பிரசிங்கிமார்கள் பலர் உபவாசம் இருந்து ஜெபித்து சபையினருக்கு தேவ செய்தி கொடுக்காமல், தங்கள் மனதும் மாம்சமும் விரும்பும் சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், வான்கோழி பிரியாணி என்று தாங்கள் செல்லும் சபைகளில் துணிந்து கேட்டு, வாங்கி புசித்து தேவ செய்திகளை கொடுக்கிறனர். இப்படிப்பட்ட நிலையில் சபை மக்கள் எப்படி தேவ ஆசீர்வாதம் பெற முடியும் ? திருச்சபையில் உயிர் மீட்சி எப்படி ஏற்பட முடியும் ?
ஒரு வேளை உணவு, ஒரு வேளை காப்பியை கூட விட்டுக் கொடுக்க மனம் மற்றவர்களாக கிறிஸ்துவ மக்கள் இருக்கின்றனர். சரீரத்தில் சர்க்கரை நோயா, இரத்த கொதிப்பு நோயா, எதுவாயிருந்தாலும் பரவாயில்லை மனம் போல் புசிக்கும் மக்கள் உள்ளனர். "பகல் முழுவதும் கண்ணில் படும் அதை இதை நான் சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றேன்" என்று ஒரு அன்பான சகோதரி தொலைபேசியில் என்னோடு பேசும் போது பேசினார்கள். அநேகருடைய காரியமும் அதுவேதான்.
ஒரு பெரிய இடத்து கிறிஸ்தவ கல்யாணம். பலவிதமான உணவு வகைகள் பந்தியில் பரிமாற பட்டுக்கொண்டிருந்தன. ஒரு கிறிஸ்தவ மனிதர் "இன்று ஒரு பிடி பிடித்து விட வேண்டியதுதான்" என்று குரலோடு போஜனபந்தி அறைக்குள் நுழைந்து செல்கின்றார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களையும், தேவ ஊழியர்களையும் இன்று இந்த பெருந்தீனி என்ற ராட்சதன் தனது குகையில் அடைத்து வைத்து குகை வாயிலை பெரிய பாராங்கல்லை வைத்து மூடி இருக்கிறான். இவர்கள் தங்களது ஆகார மோகத்தில் இருந்து தேவ பெலத்தால் தங்களை விடுவித்துக் கொள்ளாத பட்சத்தில் முடிவில் நஷ்டப்பட்ட பாவிகளாகவே தங்களை காண்பார்கள் (லூக் 21:34-36) தேவ ஊழியர்களுடைய (எல்லோரும் அல்ல) சமையலறையில் குளிர்பதன பெட்டிகளை போய் பார்த்தால் அங்குள்ள உணவுப் பொருட்களின் மூலமாக அவர்கள் எத்தனையான இருண்ட குகையில் சாத்தான் அவர்களை அடைத்து வைத்திருக்கிறான் என்பது தெரிய வரும்.
ஆ ! மனிதனின் ஆகார மோகம் அவனது புதை குழி வரைக்கும் நீண்டு செல்கின்றது. மனிதர் விரும்பி புசிக்கும் ஆகாரங்களை அவர்கள் செத்த பின்னர் சமைத்து எடுத்து அவற்றை செத்த மனிதரின் சவக்குழியில் மேலே வாழை இலை போட்டு புறமதஸ்தர் படைப்பதை நாம் காண்கின்றோம். காரணம் அந்த ஆகாரம் மோகம் கொண்ட செத்த மனிதரின் ஆவி கட்டாயம் வந்து அதை சாப்பிடும் என்பது அவர்களின் முழுமையான நம்பிக்கை.
பெருந்தீனி, ஆகாரமோகம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவனை தேவனுக்கும் சமுதாயத்துக்கும் ஒன்றுக்கும் உதவாமல் இந்த பெருந்தினி, ஆகாரமோகம் செய்துவிடும். பெருந்தீனிகாரர்களோடு நீ சேராதே. சேர்ந்தால் அந்த கொடிய தொற்று நோய் உன்னையும் பற்றி பிடித்து அதன் மூலம் நீயும் அழிந்து போவாய் என்று தேவன் நம்மை எச்சரிக்கின்றார் (நீதி 23:20)
"நாம் சாப்பிடும் உணவை ஆகார மோகத்தோடு சாப்பிடாமல் நாம் உயிர் வாழ அவசியமான மருந்து என்ற உணர்வோடு அதை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது மூக்குமுட்ட சாப்பிடாமல் மீண்டும் ஒரு உணவை சாப்பிடக்கூடிய இடத்தை வயிற்றில் கொடுத்து சாப்பிட வேண்டும்" என்ற காந்தியடிகளின் வார்த்தைகளை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பது அவசியமாகும். "பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன் கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாயிருக்கபட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது" (பிரச 10:17) என்ற தேவ வார்த்தை திரண்ட தேவ ஆசீர்வாதங்களுக்கு நேராக நம்மை வழிநடத்தி செல்லும்.
No comments:
Post a Comment
Thank you for visiting our page.