பாவத்தை கண்ட மாத்திரத்தில் விலகி ஓட வேண்டும்
-------------------------------------------------------------
பொல்லாங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டு விலகுங்கள் (1 தெச 5:22) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது.
நீங்கள் எப்பொழுதாவது ஒரு காகமோ அல்லது இரண்டு காகங்களோ ஒரு பருந்தை அல்லது ஒரு பைரியை அல்லது ஒரு வல்லூறை வான வீதியிலே மாறி மாறி கொத்தித் துரத்தி விரட்டிக்கொண்டு செல்வதை கவனத்திருரக்கின்றீர்களா? ஏன் அந்த காகங்கள் அப்படி அவற்றை கொத்தி துரத்தி செல்கின்றன தெரியுமா ?
அந்த எல்லையில் எங்கோ ஒரு மரத்தில் அந்த காகத்தின் கூடும் அதன் குஞ்சுகளும் இருப்பதாலேயேதான் அவ்விதமாகச் செய்கின்றன. காகத்தின் கூடும் அதன் குஞ்சுகளும் இருந்தால் அந்தக் கூட்டிற்கான காகங்கள் தங்கள் கண்களில் படும் பறவைகள் முதல் மனிதர்வரைக்குமான அனைத்தையும் தங்கள் எல்லையில் இருந்து கொத்தி தாக்கி துரத்தி ஓட்டும்.
சமீபத்தில் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மரம் ஒன்றில் ஒரு பெரிய குரங்கை இரண்டு காகங்கள் ஒன்று சேர்ந்து மிகுந்த வீராவேசத்துடன் கொத்தி துரத்துவதை நான் கண்டு ஆச்சரியமுத்து அக்கம் பக்கத்தில் பார்த்தபோது சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடும் குஞ்சுகளும் இருப்பதை கவனித்தேன். அந்த கூட்டின் காகங்கள்தான் மேற்கண்ட குரங்கை தாக்கியவைகளாகும். இதன் மூலம் நான் ஒரு பெரிய ஆவிக்குரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். எவ்விதமாக காகங்கள் தங்கள் குஞ்சுகள் இருக்கக்கூடிய எல்லையிலிருந்து அவற்றை கொத்திக் கொண்டு செல்லக்கூடிய மற்ற பறவைகளையும், குஞ்சுகளுக்கு தீங்கிழைக்க கூடிய விலங்குகளையும், மனிதரையும் கொத்தி துரத்தி விரட்டி விடுமோ அதைப் போன்று விலையேறப் பெற்ற நம் ஆத்மாவை தாக்கிக் கறைப்படுத்தக்கூடிய சத்துருவின் நடமாட்டங்களையும், சலனங்களையும் ஆவிக்குள் நாம் உணர்ந்த மாத்திரத்தில் நம் ஆத்மாவின் எல்லையிலிருந்தே அவனை துரத்தி அடித்து ஒட்டி விட வேண்டும் என்பதுதான் அது.
அதிகமாக நாம் ஜெபித்து ஒவ்வொரு நாளையும் நாம் ஆரம்பிப்போனால் பிசாசு பாவச் சோதனைகளை அத்தனை எளிதாக நமக்கு முன்பாக போட்டு வெற்றி கொள்ளுதல் இயலாத காரியம் ஆகும்.
"தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி ?" (ஆதி 39:9) என்று கூறினவாரே தன் வஸ்திரத்தை போத்திபாரின் மனைவியின் கரங்களில் விட்டு விட்டு தலை தெறிக்க ஓடிய நீதிமான் யோசேப்பை போன்று நாமும் பாவத்தை கண்டதும் விலகி ஓடி நம்முடைய விலையேற்றப் பெற்ற ஆத்மாவையும், கர்த்தருடைய பரிசுத்த நாம மகிமையையும் காத்துக் கொள்வோமாக.
No comments:
Post a Comment
Thank you for visiting our page.