கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் உண்டாகும் தைரியம்
“ஆகையால், சகோதரரே, நாம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது' (எபி. 10 : 19, 20)
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கான வழி, திரைச்சீலையால் அடைக்கப்பட்டிருந்தது. பிரதான ஆசாரியன் கூட வருடத்தில் ஒரு நாள் பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்துடன், பயத்தோடும் நடுக்கத்தோடும் அதற்குள் பிரவேசித்தான். ஏனெனில் அது அவனுக்கு மரண வழியாகவும் மாறிவிடக்கூடும்! ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இதே வழியை நமக்கு ஜீவபாதையாக, ஜீவனுள்ள வழியாக மாற்றிவிட்டது!
எபிரெயர் 10 :19 - இல் கூறப்பட்டுள்ள 'மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு' என்பது ஆங்கில வேதாகமத்தில், 'மகா பரிசுத்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் நாம் மகா பரிசுத்தமான ஜீவியத்திற்குள் பிரவேசிக்கும் தைரியத்தை பெற்றுக்கொள்கிறோம். எவ்வளவு பெரிய சிலாக்கியம்! அவருடைய இரத்தத்தினாலே நாம் மகா பரிசுத்தத்திற்குள் பிரவேசிக்கலாம்; நாம் ஒரு மகா பரிசுத்தமான ஜீவியம் செய்யலாம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒரு பரிசுத்தவான், ஆழ்ந்த துன்பங்களிலுங்கூட, தெய்வீகமான தைரியமுள்ளவனாயிருப்பான்: *“நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்”; சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமான சிங்கம்' (நீதி. 28 :1, 30:30)* என நாம் வாசிக்கிறோம். உன் வாழ்க்கையில் ஏதேனும் பாவத்தை நீ மறைத்து வைத்திருந்தால், ஆபத்து நேரத்தில் உனக்கு யாதொரு தைரியமும் இல்லாமற்போகும்; உன் இருதயம் மெழுகுபோல் உருகிப்போகும் - “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது."
நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் (புதிய எருசலேம், சீயோன்) பிரவேசிப்பதற்கு நமக்குத் தைரியம் உண்டாகும்படி, நம் இருதயத்தைக் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டதாய் காத்துக்கொள்ள கர்த்தர் தாமே நம் அனைவருக்கும் உதவி புரிவாராக.
No comments:
Post a Comment
Thank you for visiting our page.