ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். - (1பேதுரு3:13-14).
ஒருஉழவன் தன் வயலில் தக்காளி விதைகளை விதைக்கும்போது, அதற்கு விதை விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு, அதற்கு தேவையானவற்றை செய்து, வெளி விலங்குகள் எதுவும் கடித்துப் போட்டு விடாதபடி சரிசெய்து காப்பான். அவன் அதை செய்வது அவனது பொழுதுபோக்கிற்காக அல்ல, தான் செய்ததன் விளைவு நல்ல ருசியுள்ள தக்காளிப் பழங்களை பெறுவதற்காகத்தான் அல்லவா?
அந்த உழவன் ஒன்றும் செய்யாமல், தக்காளிப் பழம் வேண்டும் என்றால், அது அவன் கையில் கிடைக்குமா? இல்லை, அதற்காக அவன் உழைக்க வேண்டும். விதைக்க வேண்டும், ஒரு நல்ல பழம் கிடைப்பதற்கு ஏற்றவாறு அவன் தன் வயலில் வேலை செய்ய வேண்டும்.
நாமும் அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். காத்திருக்கும் வேளையில் நாம் சும்மா எதையாவது செய்துக் கொண்டிருக்க சொல்லி நம் தேவன் நமக்கு சொல்லவில்லை. 'இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்' என்று எச்சரிக்கிறார். ஆம், நாம் மற்றவர்களைப் போல, எல்லா நாட்களைப் போல இதுவும் ஒரு நாள் என்று புதிய நாளை சொல்வதற்கல்ல, ஒவ்வொரு நாளும் கர்த்தர் நமக்கு கிருபையாக கொடுக்கிற நாட்கள் என்று அவற்றை ஜாக்கிரதையாக செலவழிக்க வேண்டும்.
அந்த உழவன் சும்மா இருந்தால் அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது, அதைப்போல கிறிஸ்தவர்களும் சும்மா இருந்தால் புதிய வானம், புதிய பூமியில் வாசம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைக்காது. ஆனால் அதற்காக நாம் பரிசுத்தத்தை காத்து, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்களில் உண்மையாக இருந்து, அவருடைய வருகைக்காக காத்திருப்போமானால் நிச்சயமாக நாமும் வாசம் செய்வோம்.
கர்த்தருடைய துணையில்லாமல் அனுதின ஜீவியத்தில் நாம் பரிசுத்தமாக வாழ முடியாது. அதற்காக அவரோடுள்ள ஐக்கியத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும். ஜெபத்திலே, வேதம் வாசிப்பதிலே, மற்றவர்களோடு உள்ள நம் உறவிலே, கர்த்தருக்கு செய்யும் ஊழியங்களிலே நாம் அவரோடு ஐக்கியம் கொண்டிருப்பதை வெளிப்படுத்த வேண்டும்.
கர்த்தர் வருகையிலே கறையற்றவர்களாக, பிழையற்றவர்களாக சமாதானமாய் காணப்படத் தக்கதாக நம் வாழ்வு வாழ வேண்டும். அதற்கான பிரயாசத்தில் நாம் ஈடுபட வேண்டும். எந்த பிரயாசமும் இல்லாமல், பரலோக ராஜ்யம் மாத்திரம் நமக்கு வேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் நிச்சயமாக நமக்கு அது கிடைப்பது அரிது. நாம் செய்ய வேண்டியதை நாம்தான் செய்ய வேண்டும். கர்த்தர் மற்றவற்றை பார்த்துக் கொள்வார்.
நமது நம்பிக்கையே நாம் கர்த்தரோடு யுகாயுகமாய் வாழுவோம் என்கிற நித்திய ஜீவனைக் குறித்ததுதான். அதற்காக நாம் இந்த உலகத்தில் வாழும்போதே விழிப்புடன் இருந்து, கறையில்லாமல், குறையில்லாமல், பரிசுத்தமாய், ஜெபத்துடன் காத்திருப்போம். சிறந்ததை அவருக்கு கொடுப்போம். அவருக்காக நம்மால் இயன்றவரை உழைப்போம். அதற்கான பலனைக் கொடுக்க கர்த்தர் வருகிறார். ஆமென் அல்லேலூயா
No comments:
Post a Comment
Thank you for visiting our page.