நாவின் அதிகாரம்
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். - நீதிமொழிகள் 18:21.
ஒரு சிறுவனுக்கு எப்போதும் அதிகக் கோபம் வரும் அவனுடைய தந்தை எத்தனையோ முறை அவனிடம் அது நல்லதல்ல என்றுச் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு கோபம் கட்டுப்படவே இல்லை. ஒரு நாள் அவன் தந்தை ஒரு பை நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், தங்கள் வீட்டிற்கு வெளியே வெள்ளைச் சாயம் போட்ட கட்டை வேலியின் மீது, ஒரு ஆணியை அடிக்கச்சொன்னார். அதன்படி, அவன் அடித்துபோது, முதல் நாளில் 37 ஆணிகளை அடித்தான்.
அடுத்த சில வாரங்களில், அவன் கோபம் குறையத் தொடங்கியது. ஏனெனில் ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், வெளியேப் போய் ஆணிகளை அடிப்பதற்கு பதிலாக, கோபத்தை கட்டுபடுத்துவது அவனுக்கு எளியதாக கண்டது. அதை அவன் தகப்பன் கண்டபோது, அவனிடம் ஒவ்வொரு நாளும்போய் அவன் அடித்த ஆணிகளை பிடுங்கச் சொன்னார். அவன் அப்படியே எல்லாவற்றையும் பிடுங்கி முடித்தான்.
அன்று சாயங்காலம் அவன் தந்தை அவனது கையைப் பிடித்து அவனைக் கூட்டிக் கொண்டுப் போய், ‘மகனே, நீ செய்தக் காரியம் நல்லது, ஆனால்பார், நீ ஆணி அடித்த இடத்தை, இந்த அழகிய வேலி இனி அப்படி இருக்கப் போவது இல்லை. நீ ஆணியடித்ததினால் ஏற்பட்ட துளைகளைப் பார், அது துளைகளோடு காட்சியளிக்கிறது. அப்படித்தான் நீ அன்புகூருகிற ஒருவரிடம், நீ கோபத்தோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், இந்த துளைகளைப் போல், இருதயத்தில் மாறாத வடுகளை ஏற்படுத்துகிறது. நீ கோபம் போன பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடுக்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கும், ஆகவே கோபத்தைக் குறைத்து கோபமான வார்த்தைகளை பேசாதபடிக் காத்துக் கொள்’ என்று அவனுக்கு அறிவுரைக் கூறினார்.
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.(யாக்கோபு 3:8-9) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை சொந்தமாகக் கொண்ட ஜனம் நாவை அடக்கிக் கொள்ள பழக வேண்டும். தேவன் கொடுத்த நாவை மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், திடனற்றவர்களை தேற்றவும், தேவனை துதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் என்று நீதிமொழிகள் 25:15ம் வசனத்தின் பின்பகுதியில் காணலாம். மற்றவர்களுக்கு பயன்படும் வார்த்தைகளையே பேசுவோம். மட்டுமல்ல, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நாம் எதை பேசுகிறோமோ, அதன்படிதான் நடக்கும். நாம் மரணத்துக்கு ஏதுவான வார்த்தைகளை பேசினால், அதன் கனியைப் புசிப்போம். ஜீவனுக்கேதுவான் வார்த்தைகளை பேசினால் ஜீவனைப் பெறுவோம். உதாரணமாக, சங்கீதம் 23:6ல் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்| என்று பார்க்கிறோம். அதைக் கூறுவதை விட்டுவிட்டு, என் தந்தைக்கு அல்லது தாய்க்கு இரத்த அழுத்த வியாதி இருக்கிறது, அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது அதனால் என்னையும் அது தொடரும் என்று நம் வாயினால் அறிக்கை செய்வது மரணத்துக் ஏதுவான வார்த்தைகளைப பேசுவதுப் போலாகும். அதற்கு பதிலாக, டயபடீஸோ, அல்லது ஹைபர் டென்ஷனோ அல்ல, நன்மையும் கிருபையுமே என்னைத் தொடரும் என்று அறிக்கை செய்வது, ஜீவனுக்கேதுவான வார்த்தைகளைப் பேசுவதுப் போலாகும். இன்று வரை எங்கள் குடும்ப ஜெபத்தில், எங்கள் ஜெபங்கள் முடிந்தப் பிறகு நாங்கள் குடும்பமாக, 23ம் சங்கீதத்தை விசுவாச அறிக்கையாக சொல்லித்தான் முடிப்போம். ஆந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வார்;த்தைகளும் அற்புதமானது. எங்கள் அறிக்கைக் கேட்டு தேவன் எங்களை ஆசீர்வதிக்கிறார். நீங்களும் அப்படி செய்யலாமே!
ஆகவே, நல்ல வார்த்தைகளைப் பேசுவோம், விசுவாச வார்த்தைகளைப் பேசுவோம், மற்றவர்களுக்கு ஆறுதலை தேறுதலைக் கொண்டு வருவோம். அதற்காகவே தேவன் நாவைப் படைத்தார் என்று விசுவாசிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!
நன்றியால் துதிப் பாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
.
ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, எங்கள் நாவினால் நாங்கள் பாவம் செய்யாதபடி, எங்கள் நாவுகளைக் காத்துக் கொள்ள எஙக்ளுக்கு உதவி செய்யும். அவிசுவாசமான வார்த்தைகளை பேசாதபடி, விசுவாசமான வார்த்தைகளை பேசி, அதன் கனியை புசிக்க எங்களுக்கு கிருபைச் செய்யும். மற்றவர்களை பாதிக்கிற, விசனப்பட வைக்கிற வார்த்தைகளை பேசாதபடி ஒவ்வொரு நாளும் எங்களைக் காத்துக் கொள்ளும். இந்த நாவினால், உம்மைத் துதிக்கிறவர்களாக நன்றியால் எப்போதும் நாங்கள் நிறைந்தவர்களாக பாடிக் கொண்டிருக்க, கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. Amen
No comments:
Post a Comment
Thank you for visiting our page.