காட்டிக் கொடுப்பவர்கள்
கி.மு. 492ஆம் ஆண்டு பெர்சியாவை அரசாண்ட மன்னன் தரியுவுக்கு தனது இராஜ்யபாரத்தை விரிவுப்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்தது. எனவே கிரேக்க நாட்டிலுள்ள அனைத்து பட்டணங்களுக்கும் தூதுவர்களை அனுப்பி, தரியு இராஜாவுக்கு கீழ்ப்படிகிறோம் என்பதை காண்பிக்கும் அடையாளமாக அந்தந்த பட்டணத்திலிருந்து தண்ணீரும் மணலும் கொடுத்தனுப்பும்படி சொல்லியனுப்பினான். தரியு இராஜாவின் வெற்றிகளையும் படை பலத்தையும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த கிரேக்க தேசத்திலுள்ள எல்லா பட்டணங்களும் தரியு இராஜாவிற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொண்டனர்.
ஆனால் ஏதென்ஸ் பட்டணத்தார் தூதுவர்களாக வந்தவர்களை கொலை செய்தனர். எனவே தரியு அவர்களுக்கு விரோதமாக படைகளை அனுப்பினான். ஆனால் அவர்கள் தோற்றுப் போயினர். தன் படைகளை திரும்ப தரியு பெற்றான். அவன் இறந்தப்பிறகு அவனுடைய மகன் ஆட்சிக்கு வந்து மீண்டும் படைகளை அனுப்பி போராடினான். அவனிடம் இருபத்தைந்து இலட்சம் வீரர்களும், 1207 யுத்தக் கப்பல்களும் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எழுதுகின்றனர்.
யுத்தம் ஆரம்பித்தது. கிரேக்கர்கள் அவர்களோடு கடுமையாக யுத்தம் மேற்கொண்டனர். இரண்டு நாள் யுத்தத்திற்கு பிறகு எஃபியர்ட்டஸ் என்பவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பட்டணத்திற்குள் வருவதற்கு இரண்டு மாற்று வழிகளை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து தனது சொந்த பட்டணத்திற்கே துரோகம் செய்தான். இதனால் பெரிசியர்கள் அந்த யுத்தத்தில் வெற்றிப் பெற்றனர்.
பணத்திற்காக காட்டிக்கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக தனது எஜமானாராகிய இயேசுகிறிஸ்துவைவே காட்டிக் கொடுத்தான் அல்லவா? மூன்றரை வருடங்கள் அவருடன் கூடவே இருந்து அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளையும், பரலோக இராஜ்யத்தைக் குறித்த செய்திகளையும் கேட்டபோதும் அவனுடைய உள்ளத்தில் பண ஆசை இருந்தது. இயேசுகிறிஸ்து ஐசுவரியவான் பரலோகத்தில் செல்வது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதுப் போல கடினம் என்று சொல்லியும் அதை கேட்டும் அவன் மனம் மாறவில்லை. வெறும் முப்பது வெள்ளிக்காசுக்காக இரட்சகரை காட்டிக் கொடுத்தான். அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்த பரலோகத்தின் உயர்ந்த இடத்தை இழந்து போனான்.
கடைசி நாட்களிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்று இயேசுகிறிஸ்து ஒலிவ மலையின் மேல் அமர்ந்து தம் சீஷருக்கு கூறினார். *அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள். (மத்தேயு 24:10)* என்று கூறினார். ஆகையால் அவைகளுக்கு நாம் தப்பும்படி கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாவோம். பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!
*ஜெபம்*: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவோடே கூடவே இருந்தபோதும் பண ஆசையினிமித்தம் கர்த்தரை காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல் இன்றும் அநேகர் இருக்கிறார்களே தகப்பனே அவர்களிடமிருந்து எங்களை காத்தருளும். கடைசி நாட்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கப் போகிறார்கள் என்று கிறிஸ்து எங்களை ஏற்கனவே எச்சரித்திருக்கிறபடியால் நாங்கள் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படதக்கதாக பரிசுத்தமாக எங்களை காத்துக் கொள்ள கிருபை செய்தருளும். இயேசுகிறிஸ்துவின் ஜீவனுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
No comments:
Post a Comment
Thank you for visiting our page.