வாலிபர்களும், திருமணமும்
இந்த சிற்றேட்டை வாசிக்கும் வாலிபர்களாகிய நீங்கள்
அநேகர் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள் என்று
நினைக்கிறேன். இன்றைய சமுகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
மிகவும் மோசமான நிகழ்வு என்னவென்று சொன்னால் திருமணக்
கட்டமைப்பு சீர்க்குலைக்கப்படுகிறது. திருமணத்தைக் குறித்து
மக்கள் மத்தியில் நல்ல ஒரு சிந்தனைப்போக்கு இல்லை. நல்ல
குடும்பங்கள் நம் சமுகத்தில் பார்க்க முடியவில்லை. திருமணத்தைக்
குறித்து சமுகம் குறைவான மதிப்பீடு செய்கிறது. இப்படியான
சூழ்நிலையில் வாலிபர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தைக்
குறித்து எப்படியாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
உங்கள் எதிர்காலத்தைக் குறித்து எவ்விதமாக சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒருநாள் திருமண நிகழ்வை கடந்து
செல்லப் போகிறீர்கள், அதற்கு நீங்கள் எவ்விதமாக ஆயத்தமாகிக்
கொண்டிருக்கிறீர்கள்? இந்நிலையில் திருமணத்தைக் குறித்து
வேதம் என்ன சொல்லுகிறது? இதை நாம் ஆராய்ந்து பார்ப்பது
மிகவும் நலமென்று நினைக்கிறேன்.
இதைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னதாக உங்கள் முன் ஒரு
கேள்வியை வைக்கிறேன், நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா?
அடிப்படையாக இரட்சிப்பைக் குறித்து உங்கள் மனதில்
சிந்தனைப் போக்கு காணப்பட வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த
எல்லோரும், அதாவது ஆதாமின் சந்ததி முழுவதுமாக பாவத்தில்
மரித்திருக்கிறார்கள். ஆகவேதான் இந்த உலகத்தில் பிறக்கும்
ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்கிறான். முதல் பெற்றோர்களாகிய
ஆதாம்-ஏவாள் பாவத்தில் வீழ்ந்ததின் விளைவு முழு மனுக்குலமே
பாவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த பாவத்தின்
விளைவாக தேவனோடு கொண்டிருந்த உறவு முறிந்து போயிற்று,
தேவ கோபாக்கினையை சுமந்து கொண்டிருக்கிறது. பாவத்தோடு
மரிக்கிற எவனும் தேவனுடைய நீதியான சட்டப்படி அவன்
நரகத்திற்கு பாத்திரவானாகக் காணப்படுகின்றான். இந்த புவியில்
பிறக்கிற ஒவ்வொரு மனிதனும் நரகத்திற்கே பாத்திரவான். அந்த
மனிதனை கடவுள் தேடி வந்து, பாவ மன்னிப்பை ஏற்படுத்தினார்,
அந்த மன்னிப்பின் மூலம் மனிதன் மீண்டுமாக தேவனோடு
உறவுகொள்ளும்படியான வழியை உண்டாக்கினார். இயேசு கிறிஸ்துவானவர் தன் சொந்த இரத்தத்தின் மூலம் பாவ மன்னிப்பை
பெற்றுத்தந்து நமக்கு மீட்பை ஏற்படுத்தினார். அந்த இயேசு
கிறிஸ்து இல்லாமல் நாம் எவருமே இரட்சிக்கப்பட முடியாது,
பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. இரட்சிக்கப்படாத
ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசு கிறிஸ்து மிக அவசியமாக
இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
திருமணத்திற்கான ஆயத்தம்:
நீங்கள் எதற்காக திருமணம் செய்துகொள்ளப்
போகிறீர்கள்? நான் (ஆசிரியர்) திருமணம் செய்யும்போது
எனக்கு வயது 29. நான் எதற்காக திருமணம் செய்தேனென்றால்,
என்னுடைய நண்பர்கள் எல்லாருக்கும் திருமணமாயிற்று. என்
குடும்பத்தினரும் திருமணம் செய்துகொள் உனக்கு வயதாகிக்
கொண்டே போகிறதே என்று அறிவுறுத்த ஆரம்பித்தனர். ஆனால்
எனக்கோ வேலையேதுமில்லை. வேலையே இல்லாமல் எவ்வாறு
திருமணம் செய்வது என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு
ஒரு வேலையிலே சேர்ந்தேன், அதின் வருமானம் வெறும் 300
ரூபாய் மட்டுமே. இருந்தபோதிலும் ஒரு விசுவாசியை திருமணம்
செய்தேன். ஆனால் திருமணத்தைக் குறித்து வேதம் என்ன
சொல்லுகிறது என்பதைப் பற்றி ஒரு தெளிவற்ற நிலையிலே வாழ்ந்து
வந்தேன். பிறகு திருமணத்தைக் குறித்து அதிகமாக வாசிக்கும்
படியான சூழ்நிலை 45 வயதிலே ஏற்பட்டது. அப்பொழுது
நான் படிக்கிறபொழுது வேதம் சொல்லுவதற்கும் நம்முடைய
வாழ்க்கைக்கும் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறதே என்று
தெரிந்த போது, நான் மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது
தான் இனிவரும் சந்ததியினர் திருமணத்தைக் குறித்து ஒரு நல்ல
அறிவோடு திருமணம் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.
இன்றைக்கு பெண்பிள்ளைகளைக் குறித்து அநேகப் பெற்றோர்கள்
அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட
வயதினை அடையும்பொழுது பெற்றோர்களால் நிம்மதியாக
இருக்கமுடிவதில்லை. என்ன செய்வது, ஏது செய்வது என்ற ஒரு
அச்சம். ஆண்பிள்ளைகளைக் குறித்தும் ஒரு பயம், வயதாகிவிட்டதே
திருமணத்தை செய்திட வேண்டுமே என்ற ஒரு எண்ணம்.
இப்படியான ஒரு நிலையில் வேதம் திருமணத்தைக் குறித்து
என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
1. அன்பு என்றால் என்ன?
திருமணத்திற்கு முன்னதாக அன்பு என்றால் என்ன
என்பதைக் குறித்து நாம் அறிந்துகொள்ளவது அதிமுக்கியமான
ஒன்றாகும். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப்
பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில்
சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும்
தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்,
சகலத்தையும் சகிக்கும்” (1கொரி 13:4-7) என்று பவுல் அன்பின்
குணாதிசயங்களை விவரிக்கின்றார். அன்பைக் குறித்து நாம்
அடிப்படையாக ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். அறிவற்ற,
வெறும் உணர்ச்சிப்பூர்வமான அன்பைக் குறித்து வேதம் ஒருக்காலும்
போதிக்கவில்லை. திருமணம் என்பது ஒரு ஆ ண் / பெ ண்
மரிக்கின்ற வரைக்கும் இருவரும் கணவனும் மனைவியுமாக
ஒன்றாக வாழவேண்டும். அதற்கு மிகவும் இன்றியமையாதது
அன்பு. அன்பு இல்லாமல் வாழமுடியாது. அன்பைக் குறித்து
நாம் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டுமாயின், வேதப்
புத்தகத்திலுள்ள நான்கு சுவிசேஷங்களையும் திரும்ப திரும்ப
வாசிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வை நாம்
புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்து யாரை நேசித்தார் என்பதை நாம்
ரோமருக்கு எழுதின நிருபத்தில் 5 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.
இங்கு மூன்று குறிப்புகளை பவுல் குறிப்பிடுகிறார். 1. நாம்
பெலனற்றவர்களாக இருக்கும்போது, 2. பாவிகளாய் இருக்கும்
பொழுது, 3. சத்துருக்களாய் இருக்கும்போது (ரோமர் 5:6,8,10)
கிறிஸ்து நமக்காக மரித்தார் என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து
சத்துருவை நேசித்தார்.
சத்துருவை நாம் நேசிக்கமுடியுமா?உங்களுக்குயார்மேலாவது
ஒரு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டது என்று சொன்னால்
நீங்கள் அந்த நபரை எப்பொழுதும் அதே கண்ணோட்டத்தில்தான்
பார்ப்பீர்கள். “அந்த நபரா அவர் அப்படிதான்” என்கிற எண்ணம்
உங்களைவிட்டு நீங்காதிருக்கும். எப்போதோ நடந்த ஒரு நிகழ்வை
நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டேயிருப்பீர்கள். ஆனால் இயேசுகிறிஸ்து நம்மை அப்படி பார்ப்பதே கிடையாது. அன்பு
என்பது நித்திய அன்பு (Everlasting Love). அது எப்பொழுதும்
மாறாதது. நீங்கள் திருமணம் செய்துவிட்டால் உங்கள் துணையை
வாழ்நாள் முழுவதும் நேசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அன்பு சகலதையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்று வேதம்
சொல்லுகிறது. அன்பு என்பது உணர்ச்சியை சார்ந்ததல்ல.
இயேசுகிறிஸ்து நம்மை எப்படி நேசிக்கிறார் என்று பார்த்தால்,
நாம் என்ன நிலையில் இருக்கிறோமோ அதே நிலையில் நம்மை
ஏற்றுக்கொண்டு, நம்மை எப்பொழுதும் நேசித்துகொண்டே
இருக்கிறார். இதை நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்னதாக
ஆழமாக யோசிக்கவேண்டும். நீங்கள் கிறிஸ்துவின் அன்பை
வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் எந்த நிலையில் உங்கள்
துணையை ஏற்றுக்கொள்ளுகிறீர்களோ அதே நிலையில் மரணம்
மட்டுமாகக் காணப்படவேண்டும். இன்றைக்கு திருச்சபைகள்
இதனைக் கற்றுத் தருவதில்லை. இவைகளை நீங்கள் ஆழ்ந்து
சிந்திக்கவேண்டும். ஒரு வாழ்க்கைத் துணையை நீங்கள் திருமணம்
செய்த பிறகு வேறொருவரையும் நீங்கள் நினைத்துப் பார்க்கக்
கூடாது. இன்றைக்கு சமுகம் மிகவும் சீர்கெட்டதாக திருமணம்
செய்யாமல் சேர்ந்து வாழ்வது (Living together) என்ற நிலைக்கு
போய்விட்டது. பெரிய நகரங்களில் இது சாதாரணமாகிவிட்டது.
அன்பானவர்களே! வேதம் என்ன சொல்லுகிறதோ அதையே
செய்யுங்கள். அன்பைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது
என்பதை ஆராய்ந்துப் பாருங்கள். கிறிஸ்துவின் அன்பு உங்களில்
காணப்படுவது திருமணத்திற்கு மிக அவசியமானது.
2. யார் திருமணம் செய்யவேண்டும்?
“விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து
நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல
இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள்
விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்;
வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்” (1கொரி
7:8-9).
அப்போஸ்தலனாகிய பவுல் இங்கு திருமணம் செய்யாமல்
இருப்பது நலம் என்று சொல்லுகிறார். ஆனால் அடுத்த வசனத்தில்
விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்
என்று சொல்லுகிறார். அதாவது யாரெல்லாம் திருமணம்
செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அவர்கள்
எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
சொல்லுகிறார். விசேஷித்த வரங்களைப் பெற்ற நபர்களைத் தவிர
மற்றவர்கள் எல்லோரும் திருமணம் செய்யவேண்டும் என்று வேதம்
சொல்லுகிறது. இது தேவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒழுங்கு
முறையாகும். அந்த ஒழுங்குமுறையை நாம் வேண்டாமென்று
சொன்னால் அது முரண்பாடானதாகும்.
ஏன் திருமணம் வேண்டாம் என்று நாம் சொல்லுவோம்,
வீட்டில் பிரச்சனை அல்லது நான் நல்ல வேலைக்கு சென்றபிறகு
செய்துகொள்ளுகிறேன் என்று தட்டிக் கழிக்கிறோம்.
உதாரணமாக, இந்து மதத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்குள்ளாக
வந்திருப்பீர்களானால் உங்கள் பெற்றோர்கள் மிகவும் எதிர்ப்பு
தெரிவிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் உங்களுடைய
சிந்தனைப் போக்கு என்னவாக இருக்கவேண்டுமென்றால்,
அடிப்படையாக தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியத்தை
நோக்கிப்பார்க்க வேண்டும். கடவுள் ஆளுகிறார், அவர்
சகலத்தையும் ஆளுகிறபோது உங்களுக்கு எதிராக என்ன
நடக்க முடியும்? இது அவருடைய உலகம், நாம் அவருடைய
படைப்பு, அவருடைய பிள்ளைகளாக நாம் இருக்கும்பொழுது
நமக்கு எதிராக என்ன நடக்கும்? மத்தேயு 7 ஆம் அதிகாரத்தில்
“உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்
கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்
கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால்,
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல
ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு
நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”
என்று இயேசு கிறிஸ்துவானவர் கேட்கிறார். நாம் தேவனுடைய
சர்வ ஏகாதிபத்தியத்தை நம்புகிறோம் ஆனால் தேவன் நமக்கு
நன்மையானதை செய்வார் என்ற நம்பிக்கை குறைவாக இருக்கிறது.
“ஆண்டவரே! எனக்கு இந்த பிரச்சனைகள் இருக்கிறது, இதில் நான்
எப்படி செயல்படுவது, இதனை கடந்துபோக உதவி செய்யுங்கள்
ஆண்டவரே!” என்று நாம் கேட்கும் பொழுது தேவன் அதை
நமக்கு செய்வார்.
இன்னொரு பிரச்சனை என்னவென்று சொன்னால்,
என்னையெல்லாம் யாராவது திருமணம் செய்வார்களா? என்ற
ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுகிறீர்கள்.
நீங்கள் சிவப்பாக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி,
நீங்கள் படித்திருந்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள்
கடவுளுடைய பார்வையில் அற்புதமானவர்கள். நீங்கள் எதற்கும்
பயப்பட தேவையில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால்,
“ஆண்டவரே! நான் பாவியாகிய மனுஷன், உம்முடைய
திட்டங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னுடைய
வாழ்க்கையில் தவறான எண்ணங்களும், பயங்களும் நிறைந்து
காணப்படுகின்றது இதையெல்லாம் நீக்கிப்போடும் ஆண்டவரே!”
என்று ஜெபிக்கவேண்டும். நீங்கள் எதிர்காலத்தைக் குறித்து
பயப்படவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய வாழ்க்கையில்
இயேசு கிறிஸ்து இருந்தால் அந்த வாழ்க்கை எப்பொழுதும்
சந்தோஷமும், மனநிறைவுமே காணப்படும். இயேசுவானவர்
பரமேறுவதற்கு முன்னதாக, வானத்திலும் பூமியிலும் சகல
அதிகாரங்களும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று
சொன்னார். எல்லா அதிகாரமும் அவருடையது. ரோமர் 8
ஆம் அதிகாரத்தில் தேவன் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு
விரோதமாய் இருப்பவன் யார் என்று சொல்லுகிறார். கிறிஸ்துவின்
அன்பைவிட்டு உன்னை யாராவது பிரிக்க முடியுமா? இயேசுகிறிஸ்து
உன்னோடிருக்கும்பொழுது எதற்காக எதிகாலத்தைக் குறித்துப்
பயப்படவேண்டும்? ஆகவே நீங்கள் அவசியம் திருமணம்
செய்துகொள்ளவேண்டும்.
3. திருமணம் என்பது உடன்படிக்கை
“இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும்
விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே
மாம்சமாயிருப்பார்கள்” (ஆதி 2:24).
திருமணம் என்பது ஓர் உடன்படிக்கை. இது கடவுள்
ஏற்படுத்தினது. இந்த உடன்படிக்கையை நீங்கள் மீறவேகூடாது.
திருமணம் செய்யும்போது திருச்சபையில் கர்த்தர் முன்பாக எடுக்கும்
உறுதிமொழியை என்றைக்கும் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்றைக்கு உங்களுடைய மனதில் இந்த சமுகம் கற்றுக்கொடுத்த அநேக காரியங்கள் நிரம்பிக் காணப்படுகின்றது. உன்னுடைய
பெற்றோர்கள், நண்பர்கள், தொலைகாட்சிகள் கற்றுக்கொடுத்த
காரியங்களினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். என்ன
காரியம் அது? சாதி, வரதட்சணை. இவைகளால் நீங்கள் ஆழமாக
பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதிலிருந்து உன்னால் மீண்டு
வரவேமுடியாது. நீங்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று
நினைத்தீர்களானால்உங்கள் பெற்றோர்கள் சொல்லுவார்கள்,உனக்கு
தெரியுமா நாமெல்லாம் யாரென்று, நாமெல்லாம் உயர்ந்தவர்கள்
அல்லது நாமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் இதெல்லாம் நமக்கு
வேண்டாம் என்பார்கள். இவ்விதமான பொல்லாத சமுகத்தைவிட்டு
வெளியே வாருங்கள். அதெல்லாம் சத்தியமா? அதெல்லாம்
வேதமா? நீ வேதத்திற்கு முழுமையாக கீழ்ப்படியும் போது
மாத்திரமே இதிலிருந்து நீங்கள் வெளியே வரமுடியும். இன்றைக்கு
அநேக வாலிபர்கள் மன அழுத்தத்திற்குள்ளாக செல்வதற்கு காரணம்
என்னவென்று பார்த்தால், இந்த சமுகத்தினால் திணிக்கப்பட்ட
காரியங்களாக இருக்கிறது.
இன்றைக்கு திருமணம் என்று சொன்னால் எல்லோரும்
கூட்டுக் குடும்பம் என்று சொல்லுவார்கள். கூட்டுக் குடும்பத்தை
வேதம் ஒருக்காலும் ஏற்கவில்லை. திருமணம் செய்வீர்களாகில்
உங்கள் பெற்றோர்களோடு இருக்கக்கூடாது. நீங்கள் திருமணம்
செய்தபிறகுவீட்டோட மருமகனாகவோ,வீட்டோட மருமகளாகவோ
போகக்கூடாது. நீங்கள் உங்கள் கணவனுக்கு மனைவியாகவும்,
உங்கள் மனைவிக்கு கணவனாகவும் செல்லவேண்டும். அதற்காக
உங்கள் பெற்றோர்களோடு பேசக்கூடாது என்று சொல்லவில்லை.
நீங்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். தனியாகத்தான் குடும்பம்
நடத்தவேண்டும். அதுதான் உடன்படிக்கை. நீங்கள் இருவரும்
உங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து ஒன்றாக இணைந்து
வாழவேண்டும். இதைத்தான் வேதம் போதிக்கின்றது. இங்கு நான்
ஏதோ என்னுடைய தனிப்பட்ட கருத்தையோ, அனுபவத்தையோ
எழுதவில்லை. இதுதான் வேதம் சொல்லுகிறது, இதுதான்
நாம் செய்யவேண்டும், இதுதான் சீர்திருத்தம், இதை மீறி
நாம் வேறெதையும் சிந்திக்கக்கூடாது. இந்த சமுகம் அநேக
காரியங்களை நம்மில் உட்புகுத்தியிருப்பதால், நாம் ஒவ்வொரு
காரியத்தையும் வேதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். நீங்கள்
செய்கின்ற சிறிய காரியத்தையும் வேதத்தோடு இதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது, அந்த காரியத்தைக் குறித்து வேதம்
என்ன சொல்லுகிறது என்று நாம் ஆராய்ந்துப் பார்க்கவேண்டும்.
வேதம் என்ன சொல்லுகிறதோ அதை செய்ய நாம் ஒவ்வொரும்
ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் ஒரு மெய்யான
சந்தோஷமான கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்கமுடியும்.
4. கணவன்/மனைவி என்பவர்கள் தேவன் அருளும் ஈவு
“வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள
மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு” (நீதி 19:14).
மனைவி என்பவள் கர்த்தர் அருளும் ஈவு. நாம் என்ன
நினைக்கிறோம், நான் கண்டுபிடித்தேன். இல்லை அவர்கள் தேவன்
கொடுத்த ஈவு. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக அதிகமாக
ஜெபிக்கவேண்டும். “ஆண்டவரே! ஏற்ற ஒரு துணையை தாருங்கள்,
என்னுடைய ஞானம் குறைவற்றது, என்னுடைய தெரிவு வீண்.
உமக்கு சித்தமான ஒரு துணைத் தாருங்கள் ஆண்டவரே! நான்
காத்திருக்கிறேன்” என்று நாம் கர்த்தரிடத்தில் மன்றாடவேண்டும்.
தேவன் அருளும் ஈவுக்காக பொறுமையாக காத்திருங்கள்.
5. எதிர்கால வாழ்க்கைக்காக ஆயத்தப்படவேண்டும்:
“வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில்
அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு” (நீதி 24:27).
வாலிபர்கள் எதிர்கால வாழ்க்கைக்காக இப்பொழுதிருந்தே
ஆயத்தப்பட வேண்டும். நல்ல கடினமாக உழைத்து, சம்பாதித்து
குடும்பத்தைக் கட்டுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய
அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்தால், சரியான வயதில்
சரியான கடமையை செய்யாமல் இருப்பதே. உதாரணமாக,
படிக்கவேண்டிய வயதில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு
தவறான செயல்களில் ஈடுபடுவது, வேலைக்கு போகவேண்டிய
வயதில் வெட்டியாக வீட்டில் இருப்பது போன்ற காரியங்கள்
நம்முடைய அடிப்படை வீழ்ச்சியாக காணப்படுகிறது. நீங்கள் படிக்க
வேண்டிய வயதில் கவனமாக படிக்கவேண்டும். நன்றாக படித்து
ஒரு உயர்ந்த நிலைக்கு வரும்படியாக உழைக்கவேண்டும். ஏன்
உங்களுக்கு படிக்கிற பழக்கம் எதுவும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
ஏன் உங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள மறுக்கிறீர்கள்?
இன்றைக்கு வாசிக்கின்ற பழக்கம் உங்களிடத்தில் இல்லையென்றால்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்கமாட்டார்கள். சீர்திருத்த
வாதியான ஸ்பர்ஜன், “சட்டையை விற்றாவது புத்தகத்தை வாங்கு”
என்று சொன்னார். நாமோ வேதத்தையே வாசிப்பது கிடையாது.
இப்படியாக வாழ்ந்தால் எப்படி நாம் முன்னேற முடியும்? சீரழிந்து
கொண்டிருக்கிற இந்த சமுகத்தை எவ்வாறு நாம் சீர்ப்படுத்துவது?
நீங்கள் அதிகமான ஆவிக்குரிய புத்தகங்களை வாசிக்கவேண்டும்
என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது.
நீங்கள் நன்றாக படித்து, புதிய கண்டுபிடிப்புகளை
கண்டுபிடித்து எவ்வளவோ நன்மைகளை செய்யலாமே. அறிவை
வளர்த்துகொண்டு உயர்ந்த ஒரு நிலைக்கு நீங்கள் செல்லும்பொழுது
உங்கள் திருச்சபை வளர்ச்சிக்கு உதவலாம், சமுகத்திற்கு
நன்மையை நீங்கள் செய்யலாமே, ஏன் நீங்கள் இதையெல்லாம்
செய்வதில்லை? தேவன் உங்களுக்கு அறிவையும், ஞானத்தையும்
கொடுக்கவில்லையா? தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்.
ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, “வெளியில் உன் வேலையை
எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக்
கட்டு”. உங்களுடைய நேரங்களை எவ்வாறு செலவிடுகிறீர்கள்?
உங்களில் எத்தனைப் பேர் வகுப்பில் முதல் மதிப்பெண்
எடுத்திருக்கிறீர்கள்? சிந்தியுங்கள். நீங்கள் அலுவலகத்தில் வேலை
செய்யும்பொழுது, எல்லோரும் உங்களைப் பார்த்து பிரமித்துப்
போகவேண்டும், கடினமாக உழைக்கவேண்டும். எப்பொழுதும்
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஊதியத்திற்காக வேலை
செய்யக்கூடாது. நீங்கள் செய்கிற வேலையை நேசிக்க வேண்டும்
அப்பொழுதுதான் அந்த வேலையை சந்தோஷமாக செய்யமுடியும்.
எந்த ஒருவேலையையும் நேர்த்தியாக செய்யவேண்டும்.
ஏனோதானோவென்று எந்த வேலையையும் செய்யக்கூடாது.
புத்திக் கூர்மையோடு செயல்படவேண்டும். இன்றைக்கு சமுகத்தில்
லஞ்சம் வாங்கி சமுகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ
ஏன் அவர்கள் மத்தியில் ஒழுக்கமுள்ளவனாக, நேர்மையுள்ளவனாக
உன் பணியை நீ செய்யக்கூடாது? நீங்களும் சமுகத்தை
கெடுக்காதீர்கள். இவைகள் எல்லாம் திருமணத்திற்கான ஒரு
ஆயத்தமாகும். இன்றைக்கு அநேக குடும்பங்கள் கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. மனைவி வேலைக்கு செல்லுகிறாள், அவள்
தனியாக செல்லும்போது சமுகத்தினால் பாதிக்கப்படுகிறாள்.
இதற்கெல்லாம்யார் பொறுப்பு? நீ நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு
செல்லும்பொழுது குடும்பமாக எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக
வாழலாம். ஏன் நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கமாட்டோம்
என்கிறீர்கள்? வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்த வேண்டும்.
வேலையே இல்லாத சோம்பேறிகளெல்லாம் திருமணத்திற்கு
தகுதியற்றவர்கள். உங்களுக்கு திருமணம் செய்யவேண்டும்
என்கிற ஆசை இருந்தால் கட்டாயமாக நீங்கள் வேலைக்கு
செல்லவேண்டும். வேலையில்லாமல் திருமணம் செய்தால்,
வாழ்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை உங்களால் பூர்த்தி
செய்யமுடியுமா? உன்னை நம்பி வந்த மனைவியை சந்தோஷமாக
பார்த்துக்கொள்ளுவீர்களா?ஏன் பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்?
ஏன் நீ இன்றைக்கு கஷ்டப்படுகிறீர்கள்? சிறு வயதினில் நன்றாக
படிக்காமல் இருந்ததே காரணம். மனந்திரும்புகள், தேவனிடத்தில்
ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவனுடைய
பெலத்தினாலே எல்லாவற்றையும் செய்யுங்கள்.
6. ஆவியின் கனிகள் காணப்படவேண்டும்:
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம்,
நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம்,
இச்சையடக்கம்;” (கலாத்தியர் 5:22-23)
திருமணத்திற்கு முன்னதாக உன் இருதயத்தை
ஆயத்தப்படுத்தவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இந்த
வசனங்களை ஆராய்ந்துப் பார்த்தால் மிகவும் உன்னதமான
ஒன்றாகும். உதாரணமாக முதலில் இருப்பது அன்பு. இந்த அன்பு
என்பது உணர்சிகளால் ஏற்படும் இச்சையைக் குறிப்பிடவில்லை.
அன்பு என்பது தியாகம் செய்வது, இழப்பது, கொடுப்பது
போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் காணப்படும்
ஒவ்வொன்றும் உன்னதமானது. இவைகளெல்லாம் இருதயத்தின்
வெளிப்பாடாக உள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
வீழ்ந்துபோன மனிதனிடத்தில் இவைகளில் ஒன்றும் காணப்படாது.
நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் உங்கள் சுபாவம்
மாற்றப்பட்டிருக்கும். ஆராய்ந்துப் பாருங்கள்.7. ஞானமாக தெரிவு செய்யவேண்டும்:
“கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள
மனுஷனோடே நடவாதே” (நீதி 22:24).
ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ ஞானமாக
தெரிவு செய்யவேண்டும். அவன் முதலில் கோபப்படுபவனாக
இருக்கக்கூடாது. நீங்கள் விசுவாசிகளாக இருப்பீர்களாகில்
கோபப்படக்கூடாது. சரியான காரணத்திற்காக மட்டுமே
கோபப்படவேண்டும். சத்தியத்திற்கு எதிராக சூழ்நிலைகள்
மாறும்போது மாத்திரமே கோபம் வரவேண்டும், வேறெந்த
காரணத்திற்காகவும் கோபப்படக்கூடாது. இயேசு கிறிஸ்துவை
பாருங்கள், அவரையே உங்களுக்கு முன்மாதியாக வைத்துக்கொள்ள
வேண்டும். எப்பொழுதும் நேசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இயேசுவை நேசியுங்கள் சகலமும் உங்களுக்கு பிடிக்கும். கிறிஸ்தவன்
கோபப்படக்கூடாது, கோபப்பட்டால் அடித்துவிடுவீர்கள்,
அடிப்பீர்களாகில் நீங்கள் மூடன் என்று வேதம் சொல்லுகிறது.
மூடன் என்பவன் கடவுளற்றவன் ஆவான். நீங்கள் யாரையும்
வெறுத்து கோபப்பட்டு அடித்துவிடக்கூடாது. வாழ்க்கை
துணையை தெரிவு செய்ய தேவனுடைய ஞானம் தேவை. அதிக
கவனமாக ஜெபத்துடன் முடிவெடுங்கள்.
8. உழைப்பவனாக இருக்கவேண்டும்:
“சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய
திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம்
முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி
மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு
சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம்
கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை
ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்” (நீதி 24:30-34).
இன்றைக்கு பிரச்சனைகளுக்கு காரணம் என்னவென்றால்
சோம்பலாக இருப்பதுதான். நீங்கள் திருமணம் செய்தால்
ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஒரு திட்டம்
வகுக்கவேண்டும். இந்த நேரத்தில் இதைதான் செய்ய வேண்டும் என்ற அட்டவணை (Work Schedule) போட்டு பின்பற்றவேண்டும்.
இதுபோன்ற ஒழுக்க முறைகளை கையாளவேண்டும். சோம்பேறிகள்
திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நலமென்று
நான் கருதுகிறேன். வாலிபத்தில் அதிகமான வேலைகளை
செய்யவேண்டும். கடினப்பட்டு உழைக்க வேண்டும்.
9. குணசாலியாக இருக்கவேண்டும்:
“குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்?
அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது” (நீதி
31:10).
உங்கள் வாழ்க்கை துணையை தெரிவு செய்யும் போது
குணசாலியான நபரை தேர்ந்தெடுக்கவேண்டும். இந்த அதிகாரம்
முழுவதுமாக வாசிப்பீர்களாகில் குணசாலியின் பண்புகளை
அறிந்துகொள்ளலாம். “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும்
வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” (நீதி
31:30) என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. வெளிப்புறமான
தோற்றத்தின் அடிப்படையில் வாழ்க்கைத் துணையை தெரிவு
செய்யக்கூடாது. கர்த்தருக்கு பயந்து வாழுகிற வாழ்க்கையைக்
கொண்டிருக்கிறார்களா என்பதை ஆராய்ந்துப் பார்க்கவேண்டும்.
10. விசுவாசியாக இருக்கவேண்டும்:
“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன்
பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும்
இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2கொரி
6:14-15)
நீங்கள் தெரிந்தெடுக்கும் வாழ்க்கை துணை
விசுவாசியாக இருக்கவேண்டும். நீங்கள் அவிசுவாசியை
திருமணம் செய்வீர்களானால் கர்த்தரால் அருவருக்கப்படுவீர்கள்.
தேவனுடைய கோபமும், சாபமும் உங்களுக்கு பலனாகக்
கிடைக்கும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவ வாலிபர்கள் தங்கள்
வாழ்க்கையில் செய்கிற மிகப்பெரிய பாவம் அவிசுவாசியை
திருமணம் செய்வதுதான். யதார்த்தமாக சிந்தித்துப்பாருங்கள்,
நீங்கள் ஒரு அவிசுவாசியை திருமணம் செய்யும்போது அவர்கள்
ஜீவனுள்ள கிறிஸ்துவை தொழுதுகொள்ளுவார்களா? ஒன்றாக சேர்ந்து குடும்ப ஆராதனையில் தேவனை ஆராதிப்பீர்களா?
அவர்கள் பத்துக் கட்டளைகளை பின்றுவார்களா? சபைக்கு
கீழ்ப்படிந்து வாழ்வார்களா? இன்னும் எவ்வளவோ கேள்விகளை
அடிக்கிக்கொண்டே போகலாம். இல்லை, நான் திருமணத்திற்கு
பிறகு அவர்களை தேவனிடத்திற்கு வழிநடத்துவேன் என்று
நீங்கள் நினைத்தால், அன்பான வாலிபர்களே! தவறு
செய்கிறீர்கள். தேவனுடைய சத்தியத்தை அறிந்தும் துணிகரம்
கொள்ளுவீர்களானால் தேவ கோபாக்கினையை சுமப்பீர்கள்
என்று தாழ்மையோடு எச்சரிக்கிறேன். நீங்கள் ஒன்றும் கடவுள்
கிடையாது, அவர்களை ஆண்டவருக்குள்ளாக வழிநடத்துவேன்
என்று சொல்லுவதற்கு. இரட்சிப்பு கர்த்தருடையது. தேவன்
உங்கள் முன் ஆசீர்வதாத்தையும் வைத்திருக்கிறார், சாபத்தையும்
வைத்திருக்கிறார் நீங்கள் எதை தெரிவு செய்கிறீர்களோ தெரிவு
செய்யுங்கள். உங்களுடைய வாழ்க்கையின் திருப்புமுனையே
இதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒருநாள் நீங்கள் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதை
நினைவில்கொள்ளுங்கள்.
11. ஆலோசனையை நாடவேண்டும்:
கடைசியாக, உங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு
செய்யும்போது அவசியம் போதகரிடத்தில் ஆலோசனையை
நாடவேண்டும். அவரே உங்கள் மேய்ப்பர். “ஆலோசனையில்லாத
இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்;” (நீதி 11:14) என்று
வேதம் சொல்லுகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சிப்பெற்ற
மூப்பர்களிடத்திலோ, போதகரிடத்திலோ கட்டாயம்
கலந்தாலோசிக்க வேண்டும்.
கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
No comments:
Post a Comment
Thank you for visiting our page.